×

இயற்கை சீற்றம் எனும் கிரக யுத்தம்

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

கிரகங்களின் இணைவே யோகம் என்று நாம் அறிவோம். அதில், யுத்த யோகம் என்பது இரண்டு பகை கிரகங்கள் இணைந்திருக்கும் போதோ அல்லது ஒன்றை ஒன்று சப்தமாகவோ அல்லது வேறு பார்வையில் பார்த்துக் கொள்வதால் ஏற்படும் நிகழ்வைதான் யோகம் எனச் சொல்லப்படுகிறது. பல பகை கிரகங்கள் இருந்தாலும் மிகவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய யுத்தம் என்பது செவ்வாய் கிரகத்தையும் சனி கிரகத்தையும் எடுத்துக் கொள்ளலாம். சில நேரங்களில் யுத்தம் மற்றும் போராட்டமே வெற்றியை தரும் அமைப்பாக இருக்கிறது. இந்த யுத்தம் என்பது அந்த குறிப்பிட்ட காலத்தில் நடைபெற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

புராணத்தில் கடவுளின் அவதாரங்கள் யாவும் யுத்தத்திற்காகவே நடந்துள்ளது. மக்களால் செய்ய முடியாத யுத்தங்களை கடவுளின் மூலமாக செய்யப்பட்டு வெற்றி தங்களுக்கு உள்ளதாக இல்லாமல் அந்த மக்களுக்கு உரியதாகவே உள்ளது. சுப்ரமணியரின் அவதாரம், கிருஷ்ணனின் அவதாரம், நரசிம்மரின் அவதாரம், துர்க்கையின் அவதாரம் ஆகியவைகளும் யுத்தத்திற்காக கொண்டுவரப்பட்டதே. சில நேரங்களில் உயிர்களை காக்க யுத்தமும் தேவை என்பதை இந்த அவதாரங்கள் உணர்த்துகிறது.

சனி + செவ்வாய் யுத்தம் ஏன்? எப்படி?

செவ்வாய் என்பது வெப்பமான கிரகம். வேகமான கிரகம். மிதமான ஒளியை கொண்டுள்ள கிரகம். ஆனால், சனி கிரகமானது மிகவும் குளிர்ச்சியான கிரகம். அதன் சுற்றுவளையங்கள் யாவும் நீல நிறத்தை பிரதிபலிக்கிறது. இது குளிர்ச்சியின் அதீத வெளிப்பாடுதான். சூரியனிலிருந்து மிகவும் தொலைவில் உள்ளதால் இருள் தன்மை உடைய கிரகம். மிகவும் மெதுவாகவே வட்டப் பாதையில் சுற்றி வருவதால் சனிக்கு மந்தன் என்ற பெயரும் உள்ளது.

இப்படி இரண்டு எதிரெதிர் தன்மையுள்ள இரண்டு கிரகங்கள் இணைவானது யுத்தம் அல்லது பேரழிவை ஏற்படுத்தும் என்பது ஜோதிட விதி. இதில், சில தருணங்களில் செவ்வாய் வக்ரம் அடைந்து இருக்கும் பொழுது சனி நேர்கதியில் இருக்கும்; அப்பொழுது ஏற்படும் இணைவு. சில நேரங்களில் சனி வக்ர கதியில் இருக்கும்; அப்பொழுது செவ்வாய் நேர்கதியில் இருக்கும் ஏற்படும் இைணவு. இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

உலகியல் ஜோதிடத்தில் சனி + செவ்வாய் யுத்தம்

உலகம் நன்றாக இருப்பின் உயிர்கள் நன்றாக இருக்கும். இது பொதுவான விதி. உலகில் யுத்தம் நடைபெறும் இடங்கள் இருப்பின் அவ்விடங்களில் வாழுகின்ற உயிர்களும் கண்டிப்பாக பாதிக்கப்படும். இப்பொழுது கோட்சாரத்தில் சனி பகவானுக்கு மூலத்திரிகோண வீடாக கும்பம் வருகிறது. இந்த கும்பத்தில் சனி பகவான் வலிமையாக ராஜாவாக அமர்ந்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக பாரபட்சமின்றி தன் கடமையை செய்கிறார். இந்த வீட்டை செவ்வாய் நான்காம் (4ம்) பார்வையாக பார்வை செய்கிறார்.

அதே சமயம், சனி தன் (10ம்) பார்வையாக செவ்வாயை பார்வை செய்கின்ற போது இணைவு என்பது ஏற்படுகின்றது. இந்த செவ்வாய்-சனி இணைவு பார்வை ஏற்படுவது விருச்சிகம் வீட்டிற்கு. எனவே, சப்தம வீடான ரிஷபம் பாதிப்படைகின்றது. மேலும், கும்பத்திற்கு சப்தம வீடாக சிம்மம் வருகிறது. ஆதலால் இதனை நெருங்கிய பகுதிகளான சென்னை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகள் பாதிக்கப்படும் பொழுது அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த கால வரலாறு

இதே போன்று 1992 ஆம் ஆண்டு சனி பகவான் மகரத்தில் இருந்த பொழுது செவ்வாய் கடகத்தில் இருந்தது. அப்பொழுதும் சப்தமமாக சனி, செவ்வாய் கிரகங்கள் ஒன்றையொன்று பார்வை செய்து கொண்டன. ஆனாலும், செவ்வாய் நான்காம் பார்வையாக (4ம்) துலாம் வீட்டை பார்வை செய்தது. அப்பொழுது சனி பத்தாம் பார்வையாக துலாம் வீட்டை பார்வை செய்த பொழுது துலாம் வீடு அதிகமாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, இயற்கை சீற்றம் ஏற்பட்டு பாபநாசம், மணிமுத்தாறு அணைப் பகுதியில் 210 மிமீ முதல் 310 மிமீ மழை கொட்டி பெரும் வெள்ளக்காடானது என்பது வரலாறு. கிரகங்களின் யுத்தங்கள் உலகையும் பாதிக்கும் அங்குள்ள உயிர்களையும் பாதிக்கும் என்பதற்கு சான்று.

கிரக யுத்தமும் ராசி மண்டலமும்

ஒவ்வொரு ராசி மண்டலங்களும் சில இடங்களை குறிப்பிடுகின்றன. அந்த ராசி மண்டலங்கள் குறிப்பிடப்படும் இடங்கள் யாவும் உலகியல் ஜோதிடத்தை ஆராய்ச்சி செய்யும் பட்சத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிகள் அந்த ராசி மண்டலத்திற்குள் உட்பட்ட பகுதியாக வருகிறது. அவ்வாறு வரும் இடங்கள் யாவும் கிரக யுத்தங்கள் நடைபெறும் தருணத்தில் பாதிக்கப்படும் என்பது மறுக்கவும் மாற்றவும் முடியாத ஜோதிட விதி. இயற்கையின் விதிகளை செயற்கையாக மனிதம் மீறும் பொழுது இயற்கை பொறுமையாக இருக்கும்.

மனிதம் இயற்கையை அதிகம் சீண்டினால் இயற்கையை அது தன்னைத்தானே சரி செய்து கொள்ளும். கடந்த கால நிகழ்வுகளில் சில எண்ணற்ற இயற்கை சீற்றங்கள், போர் யாவும் செவ்வாய் மற்றும் சனியின் யுத்தத்தால் நிகழ்கிறது என்பது மாற்ற முடியாத விதியாக உள்ளது. செவ்வாய் பார்வை செய்யும் ராசியும் சனி பார்வை செய்யும் ராசிக்கு இடைப்பட்ட பகுதிகள் யாவும் மிகவும் இயற்கை சீற்றத்தால் பேரழிவிற்கு உட்பட்டுள்ளது.

பரிவேடம் என்பது என்ன?

ஒளி வட்டத்திற்கு பரிவேடம் என்ற பெயருண்டு. சில நேரங்களில் சந்திரனை சுற்றியோ சூரியனை சுற்றியோ ஒரு வகையான ஒளி வட்டம் அமையும். இதனை நம்மூர் வழக்கு மொழியில் கோட்டை கட்டியுள்ளது என்று சொல்வர். இந்த கோட்டை கட்டியுள்ளது என்றால் மழை பெய்யும் என்ற விஷயத்தை விவசாயிகள் அடிக்கடி சொல்வார்கள். பரிவேடன் என்பது சந்திரனின் உபகிரகமாகும். இந்த பரிவேடன் என்னும் கிரகம் உபகிரகங்களில் மிகுந்த நன்மை செய்யக்கூடியது. பரிவேடன் சூரியனையோ சந்திரனையோ நெருங்கும் காலத்தில் இந்த ஒளிவளையம் வானில் தோன்றும். இக்காலத்தில மழை பெய்யும்.

The post இயற்கை சீற்றம் எனும் கிரக யுத்தம் appeared first on Dinakaran.

Tags : Sivaganesan ,
× RELATED ருசக யோகம்